காளிய மர்த்தனம்

பிருந்தாவனத்தில் யமுனையின் ஒரு பகுதியாக விஷ நீர் நிறைந்த மடு ஒன்று இருந்தது. முன்னொரு காலம் தூய நீர்நிலையாக, பல விதமான மீன்களும், நீர் வாழ் பறவைகளும் வசிக்கும் வண்ணம் திகழ்ந்த அந்த மடு, "காளியன்" என்ற விஷ நாகத்தினால் மாறுபாடு அடைந்திருந்தது. ஐந்து தலைகளுடன் மிக்க பலம் பொருந்தியதாய் திகழ்ந்த அந்த நாகம், ஏனைய உயிரினங்களுக்கு எமனாக திகழ்ந்தது. தன்னுடைய பரிவாரங்களுடன் கூடி மற்ற உயிரினங்களை அச்சுறுத்தியும், தன்னுடைய பல தலைகள் வழியாக விஷத்தை நீரில் உமிழ்ந்தும், மற்ற உயிரினங்களை அதனால் கொன்றும், மிகுந்த ஆணவத்துடன் வசித்து வந்தது. அதனுடைய விஷாக்னியால் மடுவின் ஜலம் மிகுந்த கொதிப்புடன் விளங்கிற்று. மடுவிற்கு சற்றே உயர பறந்த பறவைகள் கூட விஷக்காற்றினால் மூர்ச்சை அடைந்து கரையிலேயே விழுந்து மாண்டு போயின.

இந்நிலையில் பிருந்தாவனத்தில், நந்தருடைய பிள்ளையாக, யசோதையின் செல்லமாக வளர்ந்து வந்த கிருஷ்ணன், மாடு மேய்க்கும் பாலக பருவத்தை அடைந்தான். தினமும் தன்னுடைய நண்பர்கள் புடை சூழ கன்றுகளையும் பசுக்களையும் ஓட்டிக்கொண்டு வனத்தில் சஞ்சரித்து வந்தான்.

அது ஒரு கோடைக்காலம். மாடு மேய்க்க சென்ற ஆயர்களை, ஒரு நாள் உச்சி வேலை வெயில் மிகவும் வாட்டியது. கோபாலர்களில் சிலர் தண்ணீர் தாகத்தை தணித்துக் கொள்ள அருகில் ஏதேனும் நீர்நிலை உள்ளதா என்று தேடிக்கொண்டு காளிய மடுவிற்கு வந்தனர். தண்ணீர் பருகியவுடன் விஷம் தாக்கி கரையிலேயே மூர்ச்சை அடைந்தனர். தண்ணீர் பருக சென்றவர் ஒருவரும் மீண்டு வரவில்லை.


நீர் அருந்த சென்ற தன்னுடைய தோழர்கள் மீண்டு வராததால் அவர்களை தேடிச் சென்ற கிருஷ்ணன், விஷ ஜலம் அருந்தியதால் அவர்களுக்கு நேர்ந்த கதியை பார்த்தான். அதற்கு காரணமான காளியனுக்கு ஒரு பாடம் கற்பிக்க நினைத்தான். மடுவை ஒட்டி ஒரு கதம்ப மரம் உயர்ந்து அடர்ந்து பரவி இருந்தது. கிருஷ்ணன் தான் செய்ய வேண்டிய காரியத்தை உடனடியாக தீர்மானம் செய்து மிக உயரமான அந்த கதம்ப மரத்தின் மீது ஏறினான். நல்ல உச்சியில் மடுவின் பக்கமாக ஒரு கிளை சென்றது.
கண்ணன் அந்த கிளை வழியாக சென்று சற்றே நிதானித்தான். தன்னுடைய இடுப்பு வஸ்திரங்களை இறுக்கி கட்டிக்கொண்டு, மிகுந்த உற்சாகத்துடன் கைகளால் தாளம் செய்துக்கொண்டு, அந்த உயரமான கிளையில் இருந்து மடுவிற்குள் குதித்தான். கண்ணனுடைய இந்த செய்கையால் மடுவின் ஜலம் மிகுந்த கலக்கம் அடைந்தது. நீர் நிலையில் ஏற்பட்ட கலக்கம் உறங்கிக் கொண்டிருந்த காளியனை விழிப்புற செய்தது. அந்த நாகம் கோபத்தை அடைந்து, கலக்கத்திற்கு காரணமான கிருஷ்ணனை நோக்கி விரைந்தது. அந்த நாகத்துடன் சிறிது காலம் விளையாட எண்ணிய கிருஷ்ணன் அதன் பிடியில் சிக்குண்டது போல் ஒரு லீலை செய்தான். இதற்குள் செய்தி பிருந்தாவனத்தில் வசித்த மற்ற கோப-கோபியருக்கு தெரிந்து அனைவரும் மடுவை நோக்கி விரைந்தனர்.


கிருஷ்ணன் பிருந்தாவனத்து ஜனங்களின் உயிராவான். அவர்கள் பசுக்களிடம் பால் கறக்கும் பொழுதும், தயிர் கடையும் பொழுதும், வேறு எந்த வேலையில் ஈடுபடும் பொழுதும், வெறுமனே நிற்கும்பொழுதும், நடக்கும்பொழுதும், கிருஷ்ணன் நினைவாகவே, அவனை பற்றிய பேச்சை பேசிக்கொண்டே காலம் கழித்தனர். "தயிரோ தயிர்", "வெண்ணையோ வெண்ணை " என்று கூவி விற்பதற்கு பதிலாக "கிருஷ்ணாவோ கிருஷ்ணா", "கோவிந்தாவோ கோவிந்தா" என்று கூவிச் செல்வர். கோப-கோபியர்களின் கண்ணுக்கு கண்ணான நீலமணி இன்று ஒரு இக்கட்டில் சிக்கி இருந்தான். கிருஷ்ணனை நீரின் உள்ளே காளியனின் பிடியில் கண்ட பலர் அக்கணமே மூர்ச்சை அடைந்தனர். அன்னை யசோதா, "கிருஷ்ணா! என் கண்ணே !" என்று அலறிக்கொண்டு கிருஷ்ணனை நோக்கி ஓடினார். சில அடிகளிலே அவரும் மயக்கம் அடைந்தார். மடுவினுள் நுழைய முயன்ற எஞ்சி இருந்தவரை பலராமர் தடுத்தார். கிருஷ்ணனுக்கு ஒன்றும் ஆகாது என்றும் அவன் விரைவில் மீண்டு வருவான் என்றும் அனைவர்க்கும் ஆறுதல் மொழி கூறினார்.


தன்னுடைய பலத்தினால் மிகுந்த செருக்கை அடைந்திருந்த அந்த நாகத்திற்கு, கிருஷ்ணன் சில காலம் போக்கு காண்பித்து, பின்னர் அதன் பிடியில் இருந்து நழுவினான். தன் பின்னே அந்த நாகத்தை நீரிலேயே சுழல விட்டு, அதற்கு நன்றாக களைப்பு ஏற்படுமாறு செய்தான். பின்னர் நீரில் இருந்து உயர எழும்பி அதன் தலைகள் மீது தாவி குதித்தான். தன்னுடைய பாதங்களை காளியனின் தலைகள் மீது பலமாக அடித்து தாளம் செய்தான். அவற்றின் மீது குதிக்கவும் செய்தான். செருக்கினால் எந்த எந்த தலைகள் உயர்ந்தனவோ அவைகள் கண்ணனுடைய அழகான சிவந்த பாதங்களினால் மீண்டும் அழுந்தப் பெற்றன. காளியன் விரைவிலேயே தளர்ச்சி அடைந்தது. கண்ணனோ மிகுந்த உற்சாகத்துடன் அதன் தலைகளில் நடனமே புரிய தொடங்கினான். கிருஷ்ணன் நடனத்திற்கு ஆயத்தம் ஆனவுடன் அந்த அற்புதத்தை கண்டு ரசிக்க தேவர்களும் கந்தர்வர்களும் வானில் குழுமினர். கிருஷ்ணன் மீது மலர் மழை பொழிந்தனர்.
நீல நிற மேனியில் இடுப்பில் இருந்து முழங்கால் வரை நனைந்த மஞ்சள் ஆடை ஒட்டியிருந்தது. கிருஷ்ணன் தன்னுடைய சிவந்த பாதங்களினால் தாளம் செய்து கொண்டே இடையில் இருந்த தன்னுடைய புல்லாங்குழலை எடுத்து தன் அழகான இதழ்களில் பொருத்தி வாசிக்க தொடங்கினான். இந்த காட்சி மடுவை சுற்றி குழுமியிருந்த பிருந்தாவன ஜனங்களுக்கு ஒரு அரிய விருந்தாக அமைந்தது. மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியது. அனைவரும் கிருஷ்ணனுடைய இந்த அற்புத நடனத்தில் மனதை பறிகொடுத்து மெய் மறந்து நின்றனர்.காளியனோ மிகுந்த அவஸ்தையில் உடல் பலத்தையும் மன பலத்தையும் இழந்து கொண்டே வந்தது. அதனுடைய மதம் குறைந்து கொண்டே வந்தது. சிறுது நேரத்தில் மரண பயத்தை அடைந்தது. பகவானின் கருணையினால் உண்மை என்னவென்று அதற்கு புரிய ஆரம்பித்தது. தன்னுடைய தலைகளில் நர்த்தனம் புரிவது, புராண புருஷரான ஸாக்ஷாத் ஸ்ரீ ஹரியே என்று உணர்ந்து, மனத்தினால் அவரிடம் சரணாகதி அடைந்தது. இந்நிலையில் காளியனின் மனைவியர் தங்கள் பதியின் அவல நிலை நீங்க கிருஷ்ணனை துதி செய்தனர். அன்பே உருவான கிருஷ்ணன் உடனேயே மனமிரங்கி காளியனுக்கு அபயம் அளித்தான். மறுபடியும் நீரில் குதித்து, தன்னுடைய தோழர்களும் மற்ற பிருந்தாவன ஜனங்களும் ஆரவாரிக்க, கரை சேர்ந்தான். காளியன் தன்னுடைய பரிவாரங்களுடன் அந்த மடுவில் இருந்து நீங்கி கடல் புகுந்ததாக புராணம்.(ஸ்ரீ பாகவதம்: தசம ஸ்கந்தம்)

கிருஷ்ணன் அருளால் விஷ ஜலம் அருந்திய கோபர்கள் துயில் நீங்கி எழுவது போல் மீண்டு எழுந்தனர்.

காளியன் பொய்கை* கலங்கப் பாய்ந்திட்டு* அவன்
நீள் முடி ஐந்திலும்* நின்று நடம் செய்து*
மீள அவனுக்கு* அருள் செய்த வித்தகன்*
தோள்வலி வீரமே பாடிப் பற* தூமணி வண்ணனைப் பாடிப் பற*
(பெரியாழ்வார் பாசுரம்)

Glory unto the Supreme !!

Hi Friend,
Happy reading stories of Krishna !
~
Radha